உலகக் கிண்ணம் வெல்லும் திண்ணம்..! (1)

கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்கப்போகிறது.

"எல்லா அணிகளுமே வெற்றியை தீண்ட விரும்பினாலும் வெற்றி ஏதாவது ஒரு அணியைத்தான் தீண்டும்."

என்னதான் 20-20 கிரிக்கெட் வந்தாலும் ஒருநாள் உலகக் கோப்பை தான் சிறந்த அணி எது என தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது.

கிரிக்கெட்டின் தோற்றம் பற்றி மிக தெளிவான கருத்துகள் ஏதுமில்லை. இருப்பினும் இங்கிலாந்தில் இது தோன்றியது என்றும் மற்ற காலனி நாடுகளுக்கும் அதன் மூலமாகவே பரவியது என்பதும் பெரும்பான்மையோரின் எண்ணம். முதலில் ஐந்து நாட்களாக நடைபெறும் டெஸ்ட் போட்டிகளாகவே கிரிக்கெட் நடைபெற்று வந்தது.

1971 ல் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்ட்ரேலியா இடையிலான போட்டி மழையால் முதல் நான்கு நாள் விளையாட முடியாமல் போக கடைசி ஒருநாள் மட்டும் குறிப்பிட்ட ஓவர்களை கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. அந்த போட்டிக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக தொடந்து ஒருநாள் போட்டிகள் நடக்க ஆரம்பித்தன.

கால்பந்தைப் போல மிக அதிக அளவில் பங்கேற்கும் நாடுகள் இல்லை என்பதால் வெறும் நாடுகளுக்கு இடையிலான சுற்று பயணங்களாகவே நடைபெற்று வந்த கிரிக்கெட் போட்டிகள் முதன் முதலில் 1975ல் 8 அணிகள் மோதிக் கொண்ட முதல் உலக கிண்ண போட்டிகள் நடைபெற்றது.

1970 களில் உலகக் கிண்ண போட்டிகளை நடத்தும் அளவிற்கு பணமும் ஆடுகளங்களும் இருந்தது இங்கிலாந்திடம் மட்டும் தான். அதனாலேயே முதல் இரண்டு உலக கோப்பைகளும் அங்கேயே நடந்தன. இப்போது இருப்பதை போல கிரிக்கெட் பெரிய வியாபார பொருளாக எல்லாம் இல்லாமல் வெறும் பொழுது போக்காகவே இருந்தது.

புருடன்சியல் கிண்ணம் எனும் முதல் உலக கோப்பையில் பங்கேற்ற அணிகள் :

  1. இங்கிலாந்து,
  2. ஆஸ்திரேலியா, 
  3. நியூசிலாந்து,
  4. இந்தியா,
  5. பாகிஸ்தான், 
  6. மேற்கிந்திய தீவுகள்,
  7. இலங்கை,
  8. கிழக்கு ஆபிரிக்கா.

இந்த அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் அரை இறுதி போடிக்கு தகுதி பெற்றன.

இந்திய அணி தான் பங்கேற்ற 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று வெளியேறியது. இலங்கையை சேர்ந்த இரு மட்டைவீச்சாளர்கள் ஆஸ்த்ரேலிய பந்து வீச்சாளர்களிடம் அடி பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அரை இறுதி போட்டிகளில் ஆஸ்த்ரேலியா இங்கிலாந்தையும், மேற்கிந்திய தீவுகள் நியூசிலாந்தையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகிதி பெற்றன.

முதலாவது  உலகக்கிண்ணப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்த்ரேலியா, மேற்கிந்திய தீவு அணிகள் ஆகியன தெரிவாகின. 1975 ஜுன் 21ம் நாள் இங்கிலாந்தின் லாட்ஸ் மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 8 விக்கட் இழப்புக்கு 291 ஓட்டங்கைளப் பெற்றுக்கொண்டது. மேற்கிந்திய அணியினர் 50 ஓட்டங்களைப் பெற்றபோது 3 விக்கட்டுக்களை இழந்திருந்தது. 4வது விக்கட்டுக்காக கிளைவ்லொயிட், களிச்சாரன் ஆகியோர் இணைந்து பெற்ற 149 ஓட்டங்கள் போட்டிக்கு புனர்வாழ்வினை வழங்கியது.

இப்போட்டியில் கிளைவ் லொயிட் 102 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இவற்றுள் 2 ஆறுகளும், 12 நான்குகளும் அடங்கும். பந்துவீச்சில்  ஆஸ்த்ரேலியப் பந்து வீச்சாளர் கெரி இல்மா 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். பதிலுக்குத் துடுப்பாடிய ஆஸ்த்ரேலிய அணியினரினால் 58.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 247 ஓட்டங்களையே பெறமுடிந்தது. குறுகிய ஓட்டங்களைப் பெற்று 292 ஓட்ட இலக்கையடைய முனைந்த ஆஸ்த்ரேலியஅணியினர் 5 விக்கட்டுக்கள் ரன்-அவுட் முறையில் வீழ்த்தப்பட்டனர். பந்துவீச்சில் மேற்கிந்திய அணியின் கீத் போயிசு 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

17 ஓட்டங்களினால் மேற்கிந்திய அணியினர் வெற்றிபெற்று முதலாவது உலகக்கோப்பையை வென்றனர். இப்போட்டியில் மேற்கிந்திய அணித்தலைவர் கிளைவ் லொயிட் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

அடுத்த பதிவு..


லேபிள்கள்: ,