கணினி நான்..! வைரஸ் நீ..!


நேற்று வரையிலும் எதிலும்
பற்று அற்று திரிந்த நான்
ஒழுங்காய் சொன்னது செய்யும்
ஒரு நல்ல கணினி..!

எங்கிருந்து என்னுள் வந்தாய்
எப்படி இப்படி பரவினாய்
ஏதும் பிடிபடவில்லை
புரியவும் விடவில்லை

தடுப்பான்களின் தடை தாண்டி
தானாய் என்னுள் புகுந்த
அழகு வைரஸ் நீ..!

உன்னை என்னிலிருந்து
ஒதுக்கவும் முடியவில்லை
அழிக்கவும் மனமில்லை; என்னை
அடிக்கடி அலற விடும்
அன்பு வைரஸ் நீ..!

என் நேரணுகு நினைவகம்
உன்னையே அதிகம்  சுமக்க
இன்ன பிற இயக்கங்கள் யாவும்
மந்தமாகி போனது

என் மனம் என்னும்
நிரந்தர நினைவகத்தின் மொத்த
தகவலையும் மெல்ல அழித்து
உன்னையே  பதிக்கிறாய்

உன்னை பார்த்தால்
பதில் சொல்லும் வைரஸ்
போன்று தெரியவில்லை
ஆனாலும் கேட்காமல் விட
மனம் கேட்கவில்லை

என்னை மெல்ல
ஆட் கொள்ளப் போகிறாயா
இல்லை மொத்தமாய்
ஆளையே கொல்ல போகிறாயா.. !

கிறுக்கம் ---மனோவி 

லேபிள்கள்: ,