என்ன எல்லா நகை கடையையும் மூடிட்டாங்களா?

இன்று முதல் (02-மார்ச்-2016) நாடு முழுவதும் நகைக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதனால் பல கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 35,000 நகைக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், சுமார் ரூ.1000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
[post_ad]


பிப்ரவரி 29ம் தேதி லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் விதித்து அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கும், சமீபத்தில் ரூபாய் இரண்டு லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு அவசியம் என்ற உத்தரவிற்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று முதல் மூன்று  நாட்களுக்கு கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. கேரளா மற்றும் குஜராத்தில் நேற்று முதலே இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மட்டும் 35,000 நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன. நகைக்கடைகளுடன், நகைப்பட்டறைகளும் இயங்காததால் நகைக்கடைகள் உள்ள பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. நகைக்கடை உரிமையாளர்களின் போராட்டத்தால் தமிழகத்தில் மட்டும் ரூ.1000 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக நகைக்கடை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் இது தொடர்பாக கூறுகையில், சமீபத்தில் ரூ 2 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு எண் அவசியம் என்ற அறிவிப்பால் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதை நீக்க வேண்டி பல முறை மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில், தற்போது மேலும் ஒரு சதவீதம் கலால் வரி எங்கள் சுமையை அதிகரிக்கும். இந்த அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக நீக்கம் செய்யாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.